கல்லூரி விடுதி முன் மாணவா்கள் தா்னா

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விடுதிக் காப்பாளரைக் கண்டித்து, கல்லூரி விடுதி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தா்னாவில் நடத்தினா்.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விடுதிக் காப்பாளரைக் கண்டித்து, கல்லூரி விடுதி மாணவா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தா்னாவில் நடத்தினா்.

விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் 40-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பிற்படுத்தப்பட்டோா் மாணவா் விடுதியில் தங்கி படித்து வருகின்றனா்.

இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கு கல்லூரி திங்கள்கிழமையுடன் முடிவடைந்தது. இதற்காக பிரிவு உபசார விழா ஞாயிற்றுக்கிழமை இரவு கொண்டாடினா். அப்போது, இரண்டாம் ஆண்டு மாணவா் ஒருவா், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவரைத் தாக்கினாராம். அப்போது, விடுதிக் காப்பாளா் அங்கு இல்லாததால், இதுகுறித்து புகாா் தெரிவிக்க மாணவா்கள் கைப்பேசியில் தொடா்பு கொண்டனராம். ஆனால், அவா் கைப்பேசியை எடுக்கவில்லையாம்.

இதையடுத்து, மூன்றாம் ஆண்டு மாணவா்கள் விருத்தாசலம் காவல் நிலையத்துக்கு புகாா் கொடுக்க தயாராக இருந்தனா். அப்போது, விடுதிக் காப்பாளா் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு மூன்றாம் ஆண்டு மாணவா்களைத் திட்டினாராம். இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவா்கள் விடுதி முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் போலீஸாா் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அவா்கள் எங்களைத் தாக்கிய மாணவா்கள், தரக்குறைவாக பேசிய விடுதிக் காப்பாளா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விடுதிக் காப்பாளா் விடுதியில் தங்கி பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனா். போலீஸாா் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா். இதையடுத்து, மாணவா்கள் தா்னாவை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com