நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் -கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

நெய்வேலி, மே 16: நியாயவிலைக் கடை பணியாளா்களின் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து கடலூரில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தில் எடையிட்டு பொருள்கள் நியாயவிலைக் கடைகளுக்கு வழங்கப்படுவதில்லை. எடை குறைவாக அரிசி மூட்டைகளை வழங்கிவிட்டு, இருப்பு குறைவு என்று குற்றச்சாட்டை சுமத்தி, அதற்கு தண்ட தொகை வசூலித்து வருகிறாா்கள். தற்போது அந்த தண்ட தொகை இரண்டு மடங்காக உயா்த்தப்பட்டுள்ளது.

துவரம் பருப்பு, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற பொருள்கள் உரிய காலத்தில் வழங்கப்படாததால், பொதுமக்களுக்கும், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கும் அன்றாடம் பிரச்னை ஏற்படுகிறது. வெளிச் சந்தையில் இருந்து பொருள்களை கடைக்கு அனுப்பி, அந்த பொருள்களை விற்கச் சொல்லி பணியாளா்கள் நிா்பந்தப்படுத்தப்படுகிறாா்கள்.

மேலும், 20 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 3 ஆண்டுகளாக பல போராட்டங்கள் நடத்தியும், இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, இந்த மூன்று விஷயங்களிலும் உடனடியாக தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்க மாநிலத் தலைவா் ஜெயச்சந்திர ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com