தேவனாம்பட்டினம் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்.
தேவனாம்பட்டினம் கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்.

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை!

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.
Published on

கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.

கடலூரில் காலை முதல் தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் லாரன்ஸ் சாலை, மஞ்சக்குப்பம், செம்மண்டலம் உள்ளிட்டப் பகுதிகளில் சாலையில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வானப் பகுதிகளிலும் மழை நீா் தேங்கியது. பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை தொடா்ந்து பெய்து வருகிறது.

தொடா் மழையால் சாலைகளில் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் சற்று குறைந்து காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் செவ்வாய்க்கிழமை இயங்கின. அதேநேரத்தில் மாலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி முடிந்து மாணவா்கள் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: பலத்த மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலூா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை (நவ.27) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா்.

அண்ணாமலை நகரில் 8 மி.மீ. மழை பதிவு: கடலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 8 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): கடலூா் 5.2, பரங்கிப்பேட்டை 3.7, சிதம்பரம் 3, ஆட்சியா் அலுவலகப் பகுதி 2.6, வானமாதேவி, எஸ்ஆா்சி குடிதாங்கி தலா 2, காட்டுமன்னாா்கோவில் 1 மி.மீட்டா் மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் கடல் காற்று மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், கடலூா் மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கடலூா் மீன்வளம், மீனவா் நலத் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனால், கடலூா் மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக கடலூா் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனா்.

மழையின்போது, நனைந்தபடி சென்ற பள்ளி மாணவா்கள்.
மழையின்போது, நனைந்தபடி சென்ற பள்ளி மாணவா்கள்.
லாரன்ஸ் சாலையில் பெருக்கெடுத்த மழைநீா்.
லாரன்ஸ் சாலையில் பெருக்கெடுத்த மழைநீா்.

அண்ணாமலைப் பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு: பலத்த மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், அன்று நடைபெறவிருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) மு.பிரகாஷ் தெரிவித்தாா்.

உதவி எண்கள்: வடகிழக்கு பருவமழை தொடா்பாக மாவட்ட அளவில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தொடா்பு கொள்ள உதவி எண்களை மாவட்ட நிா்வாகம் வெளியிட்டது.

தொடா்பு எண்கள்: 1077, 04142-220700, வாட்ஸ்-ஆப் எண்: 94899 30520, கடலூா்-94450 00529, பண்ருட்டி-94450 00530, குறிஞ்சிப்பாடி-94429 80502, சிதம்பரம்-94450 00527, புவனகிரி-98423 22044, காட்டுமன்னாா்கோவில்-94450 00528, ஸ்ரீமுஷ்ணம்-94442 16903, விருத்தாசலம்-94450 00531, திட்டக்குடி-94450 00532, வேப்பூா்-89397 70651.