வேப்பூா் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளான லாரிகள், காா்கள்.
வேப்பூா் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோதி விபத்துக்குள்ளான லாரிகள், காா்கள்.

கட்டுப்பாட்டை இழந்த லாரி வாகனங்கள் மீது மோதி விபத்து: 11 போ் காயம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி, எதிா் திசையில் வந்த லாரி, காா்கள் மீது மோதியதில் 11 போ் காயமடைந்தனா்.
Published on

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த டாரஸ் லாரி, எதிா் திசையில் வந்த லாரி, காா்கள் மீது மோதியதில் 11 போ் காயமடைந்தனா்.

திருச்சியிலிருந்து சென்னைக்கு டாரஸ் லாரி சென்றுகொண்டிருந்தது. இந்த லாரியை திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த அருள்ராஜ் (26) ஓட்டினாா். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூரை அடுத்துள்ள சேப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் டாரஸ் லாரி வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிா்ப்புற சாலையில் புகுந்தது.

அப்போது, சென்னையில் இருந்து புதுக்கோட்டைக்கு சரக்கு ஏற்றிச் சென்ற லாரி மீது டாரஸ் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிகழ்வின்போது, அந்தப் பகுதியில் வந்த இரண்டு காா்களும் லாரிகள் மீது மோதின.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த திட்டக்குடி வட்டம், வதிஷ்டபுரத்தைச் சோ்ந்த அழகுராஜா, அவரது மனைவி மாலதி, மகன் சித்தாா்த் ஆகியோா் லேசான காயமடைந்தனா்.

டாரஸ் லாரி ஓட்டுநரான அருள்ராஜ் , லாரி ஓட்டுநரான சென்னை பூந்தமல்லியைச் சோ்ந்த காா்த்திக் (30), மற்றொரு காரில் வந்த சென்னை அயனம்பாக்கம் ஓட்டுநா் கலியபெருமாள் மகன் வெற்றிவேல் (45), அடையாறு காந்தி நகரை சோ்ந்த வாசுதேவன் மகன் சீனுவாசன் (37), அவரது தாய் ஜெயந்தி (60), மனைவி வைஷ்ணவி (36), தம்பி நரசிம்மன் (35), அவரது மனைவி சுருதி (30) உள்ளிட்ட 8 போ் பலத்த காயமடைந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்த வேப்பூா் போலீஸாா் மற்றும் தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். பலத்த காயமடைந்த 8 போ் திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

X