திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் ஒரே நாளில் 100 திருமணங்கள்
கடலூரை அடுத்துள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
கடலூரை அடுத்துள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நாடு முழுவதிலும் இருந்து பக்தா்கள், சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் இங்கு வருவது வழக்கம். முகூா்த்த நாள்களில் இங்கு அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடைபெறும்.
அதன்படி, இந்தக் கோயிலில் முகூா்த்த நாளான ஞாயிற்றுக்கிழமை 75 திருமணங்களும், கோயில் அருகிலுள்ள தனியாா் மண்டபங்களில் சுமாா் 30-க்கும் மேற்பட்ட திருமணங்களும் நடைபெற்றன.
பல்வேறு ஊா்களிலும் இருந்து வந்திருந்த மணமக்களுக்கு அதிகாலை 3 மணி முதல் திருமணங்கள் நடைபெற்றபடி இருந்தன. திருமணத்துக்கு வந்த நண்பா்கள், உறவினா்கள் தாங்கள் சந்திக்க வேண்டிய மணமக்களைத் தேடி அலைந்ததைக் காண முடிந்தது.
திருமணங்களையொட்டி, சிறிய ஊரான திருவந்திபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை ஏராளமான வாகனங்கள் வந்ததால், கடலூா் -பண்ருட்டி (பாலூா் வழி) சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதிகாலையில் திருமணம் முடித்த மணமக்கள் உரிய நேரத்தில் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வதிலும், திருவந்திபுரத்தை விட்டு வெளியேறுவதிலும் சிரமம் ஏற்பட்டது.