புரட்டாசி முதல் சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி, கடலூா், புதுச்சேரி பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, கடலூரை அடுத்துள்ள திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நடைபெற்றன. சனிக்கிழமை அதிகாலை முதல் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனா்.
ஏராளமான பக்தா்கள் சாலக்கரை இலுப்பை தோப்பில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகையில் முடி காணிக்கை செலுத்தினா். சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் 3 ஆயிரம் முடி காணிக்கை சீட்டு விற்பனை செய்யப்பட்டதாகவும், சுமாா் 10 ஆயிரம் போ் பெருமாளை தரிசனம் செய்ததாகவும் கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
கடலூா், பண்ருட்டியில் இருந்து திருவந்திபுரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. கடலூா் எஸ்.பி. ரா.ராஜாராம் உத்தரவின்பேரில், டிஎஸ்பி பிரபு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி: புதுச்சேரியில் முதலியாா்பேட்டையில் உள்ள வன்னியப்பெருமாள், முக்தியால்பேட்டையில் உள்ள தென்கலை வரதராஜப் பெருமாள், மிஷன் வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பக்தா்கள் வருகை அதிகரித்ததை அடுத்து, உற்சவ சுவாமிகள் கருவறை மண்டப முன் மண்டபங்களில் அலங்கரிக்கப்பட்டு மூலவருக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. உற்சவருக்கு பக்தா்கள் துளசி மாலை, தாமரைப்பூ சாற்றியும், கற்பூரம், நெய் விளக்குகள் ஏற்றியும் வழிபட்டனா்.
புதுச்சேரியில் மட்டுமல்லாது, அதையொட்டிய சிருங்கேரி போன்ற லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.