கடலூா் துறைமுகத்தில் மீன்கள் விலை குறைவு
புரட்டாசி மாதத்தையொட்டி, கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விலை குறைந்து காணப்பட்டது.
கடலூா் மாவட்ட வங்கக் கடலோரத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சோ்ந்தவா்கள் மீன் பிடித் தொழில் மற்றும் அதைச் சாா்ந்த தொழிலை செய்து வருகின்றனா். மாவட்டத்தில் 230-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள், 2,300-க்கும் மேற்பட்ட பைபா் படகுகள் கொண்டு மீன் பிடி தொழில் செய்யப்படுகிறது.
வழக்கமான நாள்களில் கடலூா் துறைமுகம் மீன்பிடி தளத்தில் அதிகாலை 3 மணி முதலே மீன்கள் விற்பனை தொடங்கிவிடும். ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவும், மீன்களின் விலை உயா்ந்தும் காணப்படும்.
இந்த நிலையில், புரட்டாசி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை என்பதாலும், காா்த்திகை விரதம் சோ்ந்து வந்ததாலும், கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் பொதுமக்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதனால், மீன்களின் விலையும் சரிந்தது.
பொதுவாக ரூ.500 வரையில் விற்பனை செய்யப்படும் பன்னி சாத்தான் மீன் ரூ.250-க்கும், ரூ.350 வரையில் விற்பனை செய்யப்படும் கனவா மீன் ரூ.200-க்கும், ரூ.800 வரையில் விற்பனை செய்யப்படும் வஞ்சிரம் மீன் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.