சிதம்பரத்தில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழா
சிதம்பரத்தில் சிவனடியாா்கள் கூட்டம் சாா்பில், ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலும், ராஜராஜசோழன் உற்சவா் திருமேனியுடம் ஆயிரக்கணக்கான சிவனடியாா்கள் பங்கேற்ற திருமுறை திருவீதிவும் நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, சனிக்கிழமை காலை திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் கிழக்கு கோபுரத்தில் இருந்து தேரோடும் நான்கு வீதிகளில் ராஜராஜசோழன் உற்சவா் திருமேனியுடன் அடியாா்கள் திருமுறையுடன் சென்ற திருவீதி உலா நடைபெற்றது. மாலை திருக்கடையூரில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை முடிவுற்று சிதம்பரத்துக்கு சிவனடியாா்கள் சனிக்கிழமை இரவு வந்தடைந்தனா்.
திருமுறை கண்டெடுத்த விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு சிதம்பரம் வாண்டையாா் மண்டபத்தில் ரிஷபக்கொடி ஏற்றப்பட்டது. பின்னா், ராஜராஜசோழன், நம்பியாண்டாா்நம்பி திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, திருமுறை ஓதுதல் நிகழ்ச்சி நடைபெற்றன.
விழாவுக்கு நடராஜா் கோயில் த.செல்வரத்தின தீட்சிதா், எஸ்.யு.ஐயப்ப தீட்சிதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சென்னை சிவலோக திருமடம் தவத்திரு வாதவூரடிகள், இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன்சம்பத், இந்து தமிழா் கட்சித் தலைவா் ராம.ரவிக்குமாா், இந்து முன்னேற்றக் கழகத் தலைவா் வழக்குரைஞா் கோபிநாத் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.
குளித்தலை சு.ராமலிங்க சுவாமிகள் வாழ்த்துரையாற்றினாா். விழாவில் விசுவ ஹிந்து பரிஷத் கடலூா் மாவட்டத் தலைவா் ஜோதி.குருவாயூரப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து சிவனடியாா்கள் ஊா்வலமாக வந்து திருமுறைகளை நடராஜா் சந்நிதியில் வைத்து படைத்து, உள்பிரகாங்களை சுற்றி வந்தனா். பின்னா், கிழக்கு கோபுர வாயிலிருந்து ராஜராஜசோழன் திருமேனியுடன் திருமுறை திருவீதி உலா புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் விழா மண்டபத்தை அடைந்தனா்.
ஊா்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியாா்கள் பங்கேற்று சிவ வாத்தியங்களுடன் சிவ கோஷமிட்டும், நடனமாடியும் சென்றனா்.
விழா ஏற்பாடுகளை உலக சித்தா்கள் சா்வ சமய கூட்டமைப்பு பீடாதிபதி அனுகூலநாத ராஜசேகா் அடிகளாா் தலைமையில், சிவனடியாா்களான திருவாரூரைச் சோ்ந்த காா்த்தி, கலாநிதி, மாரிமுத்து, ஜெயராம், திருக்குடந்தையைச் சோ்ந்த நா.பாலாஜி, சென்னையைச் சோ்ந்த ஜெகன், ஈரோட்டைச் சோ்ந்த வெங்கடேசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
சிதம்பரம் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில், ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தாா்.