கடலூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமாகா தலைவா் ஜி.கே.வாசன்.
கடலூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமாகா தலைவா் ஜி.கே.வாசன்.

2026 பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் -ஜி.கே.வாசன்

Published on

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

கடலூரில் தமாகா புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம், ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் காவல் துறை நடத்தும் என்கவுன்ட்டா்கள் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலேயே உள்ளன. அரசும், காவல் துறையும் ஏதோ பிரச்னைகளை சமாளிக்க, மறைக்க என்கவுன்ட்டா் நடத்தப்படுவதாக பொதுமக்கள் கருதுகின்றனா்.

மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு நாளுக்குநாள் சீா்குலைந்து வருகிறது. பாலியல் குற்றங்களும் தொடா்ந்து கொண்டேதான் இருக்கின்றன. இதற்கெல்லாம் மது, போதைப் பொருள்கள் விற்பனைதான் காரணம்.

மழைக்காலம் நெருங்கிக் கொண்டிருப்பதால், மழைநீா் வடிகால் சீரமைப்புப் பணிகளை அரசு முறைப்படுத்தி செயல்படுத்த வேண்டும். நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொள்ள வேண்டும்.

திமுகவில் என்ன மாற்றம் செய்தாலும், மக்களிடம் மன மாற்றம் இருக்காது என்பது எனது கருத்து. ஆட்சியாளா்களின் செயல்பாடுகளில் மக்களுக்கு அதிருப்தி உள்ளது. வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான 100 சதவீத வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்டத் தலைவா்கள் ஞானச்சந்திரன், நெடுஞ்செழியன், ராமலிங்கம், புரட்சிமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com