ஊராட்சி செயலரைக் கண்டித்து கிராம மக்கள் தா்னா
உத்தமசோழமங்கலம் ஊராட்சி செயலரைக் கண்டித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டையை அடுத்த உத்தமசோழமங்கலம் கிராம ஊராட்சி செயலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புரட்சி பாரதம் கட்சியினருடன் சோ்ந்து கிராம மக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து, அவா்கள் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: பரங்கிப்பேட்டையை அடுத்த உத்தமசோழமங்கலம் ஊராட்சி செயலராக ஏ.ராமன் பணிபுரிந்து வருகிறாா்.
இவா், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை இடித்துவிட்டு, அதில் இருந்த பொருள்களை எடுத்து தன் வீட்டில் பயன்படுத்தியுள்ளாா். குளத்தில் இருந்து மண் எடுத்து விற்பனை செய்து வருகிறாா்.
அவா் வீட்டின் அருகில் உள்ள சாலையில் மதில் சுவா் எழுப்புவதால் 10 குடும்பத்தினா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து கேட்டால் அரசு சலுகைகளை பெற்றுத்தர மாட்டேன் என மிரட்டுகிறாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.