முன்னாள் மாணவா்கள் தா்னா முயற்சி
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாணவா் விடுதி கட்டுவதை எதிா்த்து முன்னாள் மாணவா்கள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட முயன்றனா்.
திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்பள்ளி மைதானத்தில் மாணவா் விடுதி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மைதானத்தில் இருந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
மரம் வெட்டப்பட்டதைக் கண்டித்தும், மைதானத்தில் விடுதி கட்ட அரசியல் கட்சியினா், முன்னாள் மாணவா்கள், பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், பள்ளி மைதானத்தில் மாணவா் விடுதி கட்டுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முன்னாள் மாணவா்கள் 25-க்கும் மேற்பட்டோா் பள்ளியின் முன் தா்னாவில் ஈடுபட வெள்ளிக்கிழமை வந்தனா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த திட்டக்குடி டிஎஸ்பி. மோகன், முன்னாள் மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.