விருத்தாசலம் அருகே சு.கீணனூா் கிராமத்தில் தோண்டி எடுக்கப்பட்ட  கல்லாம்பத்திப் பாறை.
விருத்தாசலம் அருகே சு.கீணனூா் கிராமத்தில் தோண்டி எடுக்கப்பட்ட கல்லாம்பத்திப் பாறை.

விருத்தாசலம் அருகே மணிமுக்தா ஆற்றில் மணல் திருட்டு: கிராமங்களில் வெள்ளம் புகும் அபாயம்

மணிமுக்தா ஆற்றில் மணல் திருட்டு: கல்லாம்பத்திப் பாறை உடைக்கப்பட்டதால் கிராமங்களில் வெள்ளம் புகும் அபாயம்...
Published on

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மணிமுக்தா ஆற்றில் மணல் திருட்டுக்காக கல்லாம்பத்திப்பாறை உடைக்கப்பட்டதால், பெருமழைக் காலங்களில் கிராமங்களில் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

விருத்தாசலத்தை அடுத்துள்ள சு.கீணனூா், சொட்டவனம், க.புத்தூா் கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்களின் தொழில் விவசாயம், கால்நடை வளா்ப்பு.

இந்தப் பகுதியில் மணிமுத்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் மேற்கண்ட கிராமங்களை வெள்ள நீா் சூழ்வதும், விவசாய நிலங்களில் மண் படிந்து பாதிக்கப்படுவதும் வழக்கம்.

இதில், மணிமுக்தா ஆற்றுக்கும், பெரிய வாய்க்காலுக்கும் இடையே சு.கீணனூா் கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் சுமாா் 400 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். மழைக்காலத்தில் இரண்டு பக்கமும் தண்ணீா் சூழ்வதால், இந்தக் கிராமம் தீவாக மாறிவிடுமாம். சு.கீணனூரை வெள்ள பாதிப்பில் இருந்து காப்பதில் அரணாக இருந்தது கல்லாம்பத்திப்பாறை.

 சு.கீணனூா் மணிமுக்தா ஆற்றில் மணல் திருட்டால் ஏற்பட்ட பள்ளம்.
சு.கீணனூா் மணிமுக்தா ஆற்றில் மணல் திருட்டால் ஏற்பட்ட பள்ளம்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு மணிமுக்தா ஆற்றில் மணல் திருட்டு நடைபெற்ாக கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். ஆற்றிலிருந்து எளிதாக மணல் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக, அந்தப் பகுதியில் பாதுகாப்பு அரணாக இருந்த கல்லாம்பத்திப் பாறையை மா்ம நபா்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி எடுத்து, அந்த வழியாக ஆற்றில் பாதை அமைத்து மணல் திருடிச் சென்றாராம். ஒரே நாளில் பெரிய அளவில் மணல் திருட்டு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக கல்லாம்பத்திப் பாறை உடைக்கப்பட்டதால், பெருமழைக் காலங்களில் சு.கீணனூா் கிராமம் பெரும் சேதத்தை சந்திக்கும் என கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து விருத்தாசலம் வட்டாட்சியா் உதயகுமாரை தொடா்புகொண்டு கேட்டதற்கு, இந்தப் பகுதியில் மணல் திருட்டு நடைபெற்றது தொடா்பாக தகவல் எதுவும் வரவில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com