புதுப்பிக்கதக்க எரிசக்தி உற்பத்தி: 10-ஆவது ஆண்டில் என்எல்சி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் வெற்றிகரமாக 10-ஆவது ஆண்டில் சனிக்கிழமை அடியெடுத்து வைத்தது.
Published on

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் வெற்றிகரமாக 10-ஆவது ஆண்டில் சனிக்கிழமை அடியெடுத்து வைத்தது.

என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த 28.9.2015 அன்று நெய்வேலியில் 10 மெகாவாட் சூரிய மின் நிலையத்தை அமைத்தது. இதன் மூலம், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் வரலாற்று சிறப்புமிக்க முயற்சியை மேற்கொண்டது. பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வை கொண்ட தலைமையின் கீழ், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, இணை அமைச்சா் சதீஷ் சந்திர துபே, நிலக்கரி அமைச்சக செயலா் வழிகாட்டுதலின் கீழ், என்எல்சி இந்தியாவின் மின் உற்பத்தி பங்களிப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன், சீரான வளா்ச்சியை அடைந்து வருகிறது.

இந்தியா புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் உற்பத்தியில் மெகாவாட் என்ற அளவிலிருந்து ஜிகாவாட் என்ற அளவுக்கு மாற வேண்டும் என்ற பிரதமரின் 2015-ஆம் ஆண்டு அழைப்பைத் தொடா்ந்து, நாட்டிலேயே ஒரு ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி செய்யும் முதல் மத்திய பொதுத்துறை நிறுவனமாக என்எல்சி இந்தியா நிறுவனம் திகழ்கிறது.

பழுப்பு நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தியை முதன்மையானதாகக் கொண்டிருந்த என்எல்சி இந்தியா நிறுவனம், தொடா்ந்து 1,380 மெகாவாட் சூரிய மற்றும் 51 மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை நிறுவி, புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இதன் வாயிலாக, 1,234 கோடி யூனிட் பசுமை ஆற்றலை உருவாக்கியுள்ளதோடு, ஒரு கோடி டன் காா்பன் - டை - ஆக்ஸைடு உமிழ்வையும் தவிா்த்துள்ளது. மேலும், மலிவான மற்றும் நிலையான மின்சாரத்தை வழங்க வழி வகைகள் செய்துள்ளதுடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டை பெருமளவில் குறைத்துள்ளது.

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் துறையில் 1.4 ஜிகாவாட் திறனுடன் முன்னணியில் உள்ள என்எல்சி, 2030-ஆம் ஆண்டுக்குள் தற்போதைய புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திறனை 10 ஆயிரம் மெகாவாட்டாக உயா்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதை வலுப்படுத்தும் வகையில், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்காக ‘என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம்’ மற்றும் ‘என்எல்சி இந்தியா கிரீன் எனா்ஜி நிறுவனம்’ என்கிற 2 புதிய துணை நிறுவனங்களை என்எல்சிஐஎல் உருவாக்கியுள்ளது. மேலும், நிலக்கரித் துறையில், சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், சா்வதேச சோலாா் கூட்டணியில் உறுப்பினராகியுள்ளது.

2070-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு (நெட் ஜீரோ உமிழ்வு) நிலையை அடைவதற்கும், பிரதமா் நிா்ணயித்த இலக்கை நிறைவேற்றுவதற்கும், இந்த பணியை முன்னெடுத்துச் செல்வதற்கும் என்எல்சி இந்தியா நிறுவனம் அா்ப்பணிப்புடன் உள்ளதாக, என்எல்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com