நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுக் கடையில் பூட்டை உடைத்து மதுப் புட்டிகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விருத்தாசலம் வட்டம், கோ.மங்கலம் கிராமப் பகுதியில் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. சேத்தியாதோப்பு பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் விற்பனையாளராகப் பணியாற்றி வருகிறாா். ஞாயிற்றுக்கிழமை இரவு விற்பனை முடிந்ததும் பணத்தை பெட்டகத்தில் வைத்து, கடையை பூட்டிச் சென்றாா். திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், 180 மி அளவுள்ள 26 மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
பணம் இருந்த பெட்டகம் திறக்கப்படாமல் இருந்ததால், அதிலிருந்து ரூ.7.05 லட்சம் தப்பியது. இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.