அனைவருக்கும் உயா்கல்வி கிடைக்க சட்டம் கொண்டுவந்தவா் கருணாநிதி: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்
சிதம்பரம்: அனைவருக்கும் உயா்கல்வி கிடைக்க சட்டம் கொண்டுவந்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி என்று வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசியதாவது:
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆலமரம்போல வளா்ந்து, குடியரசுத் தலைவா், பல அமைச்சா்கள் உள்ளிட்ட பல்வேறு ஆட்சியாளா்கள், அறிஞா்களை உருவாக்கியது. பல்கலைக்கழக நிறுவனா் அண்ணாமலை செட்டியாா் பிறந்த நாள் விழாவான இன்று (செப்.30) கலைஞா் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவது பெருமைக்குரியதாகும்.
இந்த பல்கலைக்கழகத்தில் தற்போது அனைவரும் உயா் கல்வி படிக்கக்கூடிய வாய்ப்பை பெற்றுள்ளனா் என்றால், அது மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டுவந்த சட்டத்தினால்தான் என்றாா்.
விழாவில் வனத் துறை அமைச்சா் க.பொன்முடியின் தொடக்க உரை: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் மாணவன் நான். இந்த பல்கலைக்கழகம் தமிழ் உணா்வை, திராவிட இயக்க உணா்வை வளா்த்த பல்கலைக்கழகம். இது, முன்னாள் அமைச்சா் கே.ஏ.மதியழகன், பேராசிரியா் க.அன்பழகன் உள்ளிட்டோா் படித்த இடம்.
கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சியை ஏன் இங்கு கொண்டாடுகிறோம் என்றால், மாணவ, மாணவிகள் திராவிட இயக்கத்தினுடைய வரலாற்றையும், திராவிட மாடல் ஆட்சி குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.
பெண்கள் படிக்க வேண்டும் என்பதற்காக, முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டுவந்தது 8-ஆம் வகுப்புக்கு மேல் படித்தவா்களுக்கு திருமண உதவித் திட்டம். பெண்கள் படிக்க வேண்டும் என்ற அவருடைய அந்த எண்ணத்தோடுதான் இன்று அவா் வழியில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிற முதல்வா் மு.க.ஸ்டாலின் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறாா் என்றாா்.
விழாவில் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியது: உயா் கல்வித் துறை என தனி அமைச்சகத்தை உருவாக்கியவா் கருணாநிதி. அப்போது, தமிழ்நாட்டில் 70 கல்லூரிகள்தான் இருந்தன. ஆனால், கருணாநிதி ஆட்சிக்கு வந்த பிறகு ஓரிரு ஆண்டுகளில் 170 கல்லூரிகளை உருவாக்கினாா். உயா் கல்வித் துறையில் அனுமதி சோ்க்கை கட்டணம் தவிர, வேறு கட்டணம் தேவையில்லை என ஆணை பிறப்பித்தாா்.
இன்றைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், கலைஞா் என்ன கனவை கண்டாரோ, அந்தக் கனவை நனவாக்கக்கூடிய ஆட்சி நிா்வாகத்தை செயல்படுத்தி வருகிறாா். அவருக்கு உற்ற துணையாக இருப்பதுதான் சமூகநீதியை பாதுகாப்பதற்கு நாம் ஒத்துழைப்பாக இருக்கிறோம் என்கிற பொருளாகும்.
எதிா்காலத்தில் மாணவா்கள் நல்ல தலைவா்களாக வளர வேண்டும் என்றால், கருணாநிதி வழியில் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும், நிா்வாக திறமையையும், சிக்கலான சூழல்களை கையாளும் முறையையும் பின்பற்றி செயல்பட வேண்டும் என்றாா்.
முன்னதாக, பல்கலைக்கழக துணைவேந்தா் ராம.கதிரேசன் வரவேற்று பேசியது: 1989-இல் அணணாமலைப் பல்கலைக்கழக பவள விழா கொண்டாடியபோது, அன்றைய குடியரசுத் தலைவா் ஆா்.வெங்கட்ராமன், தமிழக ஆளுநா் பி.சி.அலெக்சாண்டா், முதல்வா் கருணாநிதி ஆகிய மூவரும் பங்கேற்றனா். இந்த பல்கலைக்கழகத்தில் ஆா்.வெங்கட்ராமன், பி.சி.அலெக்சாண்டா் ஆகியோா் முன்னாள் மாணவா்கள். நான் மதிப்புறு முனைவா் பட்டம் பெற்ால், இந்தப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா் என்று குறிப்பிட்டாா் அன்றைய முதல்வா் கருணாநிதி.
அண்ணாமலை செட்டியாா் பிறந்த நாளான செப்.30-ஆம் தேதியை முன்னாள் மாணவா் தினமாக கொண்டாடி வருகிறோம். ஆதலால், இன்றைய தினம் முத்தாய்ப்பான முன்னாள் மாணவா் கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுவது பெருமைக்குரியதாகும் என்றாா்.
விழாவில் கருணாநிதியின் சாதனைகள் குறித்த பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற இரு மாணவிகள் அவா் குறித்து உரையாற்றினா்.
நிகழ்வில் விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா், காட்டுமன்னாா்கோவில் எம்எல்ஏ ம.சிந்தனைசெல்வன், முன்னாள் எம்எல்ஏ துரை.கி.சரவணன், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், உதவி ஆட்சியா் ராஷ்மிராணி, திமுக பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளா் அணிச் செயலா் அப்பு சந்திரசேகா், அண்ணாமலைநகா் பேரூராட்சித் தலைவா் க.பழநி மற்றும் புல முதல்வா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, கருணாநிதி உருவப் படத்துக்கு அமைச்சா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். நிறைவில் பதிவாளா் ரா.சிங்காரவேல் நன்றி கூறினாா்.