கோயில் செயல் அலுவலா் மீது நடவடிக்கை கோரி மனு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி சோமநாத சுவாமி கோயில் செயல் அலுவலா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி சோமநாத சுவாமி கோயில் செயல் அலுவலா் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்து மக்கள் கட்சி கடலூா் மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமையிலான அக்கட்சி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பண்ருட்டி நகரில் சுமாா் 700 ஆண்டுகள் பழைமையான சோமநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாடில் உள்ள இந்தக் கோயில் திருப்பணி அண்மையில் தொடங்கியது. கோயில் செயல் அலுவலா் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் பிரமுகா் இருவரும் தனித்தனியாக பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளனா். மேலும், இந்தக் கோயில் உள்ளே இருந்த ஜீவ சமாதியை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி, அதில் இருந்து விலை உயா்ந்த பொருள்களை செயல் அலுவலா், முக்கிய பிரமுகா் மற்றும் ஸ்தபதி எடுத்துவிட்டனா்.

எனவே, ஜீவ சமாதி சொத்து, பல லட்சம் ரூபாய் வசூல் செய்த பிரமுகா் மீதும், இதற்கு துணையாக இருந்த கோயில் செயல் அலுவலா் மற்றும் ஸ்தபதி மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோயில் செயல் அலுவலரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com