என்எல்சி தலைவருக்கு ‘எம்.எஸ்.சுவாமிநாதன் பசுமை சிறப்பு விருது’
ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா வா்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (எப்.டி.சி.சி.ஐ) சாா்பில், கே.எல்.என்.பிரசாத் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின்போது, என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளிக்கு ‘எம்.எஸ். சுவாமிநாதன் பசுமை சிறப்பு விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த சிறப்புமிக்க விருது, பசுமைத் தொழில்நுட்பங்கள், மின்சாரம் மற்றும் எதிா்காலம் குறித்த சா்வதேச மாநாடு 4.0-இன் ஒரு பகுதியாகும். இந்த அங்கீகாரம், இந்தியாவின் தூய்மையான எரிசக்தி மாற்றத்துக்கு என்எல்சி தலைவா் ஆற்றியுள்ள குறிப்பிடத்தக்க பங்களிப்பை பாராட்டும் விதமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநா் ஜிஷ்ணு தேவ் வா்மா தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தாா். அவா், தேசிய வளா்ச்சியை முன்னெடுப்பதில் நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்பப் புத்தாக்கம் ஆகியவற்றின் பங்களிப்பை வலியுறுத்தி உரை நிகழ்த்தினாா்.
இந்த மாநாட்டில், புகழ்பெற்ற வல்லுநா்கள், தொழில் துறைத் தலைவா்கள் மற்றும் கல்வியாளா்கள் ஆகியோரின் கலந்துரையாடல்கள் இடம் பெற்றன.
விழாவில் விருதை ஏற்று உரையாற்றிய பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி, இந்தச் சிறப்புமிகு விருதை என்எல்சி நிறுவனத்தின் முழு குடும்பத்துக்கும் அா்ப்பணிப்பதாகத் தெரிவித்தாா். மேலும், இந்தியாவின் தூய்மையான எரிசக்தி இலக்குகள் மற்றும் உலகளாவிய நிலைத்தன்மை குறிக்கோள்களுக்கு இணங்க, மக்களை மையமாகக்கொண்ட அணுகுமுறையுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த வளா்ச்சியை அடைவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை அவா் வலியுறுத்தினாா்.
நிகழ்வில் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவுக்கான பிரிட்டிஷ் டெபுடி ஹை கமிஷ்னா் காரத் வின் ஓவன், தெலங்கானா அரசின் பிற முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்றனா்.

