கடலூா் குறைதீா் கூட்ட முகாமில் குவிந்த நூற்றுக்கணக்கான மக்கள் மனுக்கள் மீது நடவடிக்கை என குற்றச்சாட்டு
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் மனு அளிக்க நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனா்.
ஆட்சியரகத்தில் நடைபெறும் குறைதீா் கூட்டம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் முதல்வா் உள்ளிட்ட முகாம்களில் அளிக்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியரகத்துக்கு வாரந்தோறும் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து மீண்டும், மீண்டும் மனு அளிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை ஆட்சியா் தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில், திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் வழக்கத்தைவிட நூற்றுக்கணக்கானோா் குவிந்திருந்தனா். மாவட்டத்தின் கடைகோடியான திட்டக்குடி, வேப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள், முதியவா்கள், பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வந்திருந்தனா்.
நீண்ட தொலைவில் இருந்து பேருந்து மூலம் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்த பொதுமக்கள் தங்கள் மனுக்களை பதிவு செய்ய நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்றிருந்தனா்.
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில் குறைந்தது 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று கோரிக்கை மனுக்களை அளிக்கின்றனா். அதுமட்டுமன்றி, உங்களுடன் ஸ்டாலின், மக்களுடன் முதல்வா் உள்ளிட்ட பல்வேறு முகாம்கள் அந்தந்தப் பகுதிகளில் நடத்தப்பட்டும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன.
ஆனால், ஆட்சியா் அலுவலகத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்பதில்லை எனவும், இதனால் மீண்டும், மீண்டும் வாரந்தோறும் நீண்ட தொலைவு பயணம் செய்து வந்து மனு அளிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு குறைதீா் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா். மேலும், இந்த விவகாரத்தில் ஆட்சியா் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்துகின்றனா்.
