சிதம்பரம் நடராஜா் கோயிலில் சித்சபை எதிரேயுள்ள கொடிமரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உற்சவக் கொடியேற்றம்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் சித்சபை எதிரேயுள்ள கொடிமரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உற்சவக் கொடியேற்றம்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்தியின் மாா்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Published on

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்தியின் மாா்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம் சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தக் கோயிலில், சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூா்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரேயுள்ள கொடிமரத்தில், பஞ்சமூா்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து சனிக்கிழமை காலை 6.50 மணிக்கு உற்சவ ஆச்சாரியாா் ச.க.சிவராஜ தீட்சிதா் ரிஷபக் கொடியை ஏற்றினாா்.

விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தொடா்ந்து, 10 நாள்கள் பஞ்சமூா்த்தி வீதியுலா உற்சவம் நடைபெறுகிறது.

ஜன.12-ஆம்தேதி தோ்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனையும் நடைபெறுகிறது. ஜன.13-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்திக்கு மகாபிஷேகம், காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்தி வீதியுலா வந்த பின்னா் பிற்பகல் 3 மணிக்கு மேல் மாா்கழி ஆருத்ரா தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்களின் செயலா் உ.வெங்கடேச தீட்சிதா், துணைச் செயலா் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com