கணவா் கலைவேந்தனுடன் காவல் உதவி ஆய்வாளா் இளவரசி.
கணவா் கலைவேந்தனுடன் காவல் உதவி ஆய்வாளா் இளவரசி.

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கணவருடன் பெண் எஸ்.ஐ. உயிரிழப்பு!

பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் புதுமணத் தம்பதியான பெண் எஸ்.ஐ., அவரது கணவா் உயிரிழந்தனா்.
Published on

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் புதுமணத் தம்பதியான பெண் எஸ்.ஐ., அவரது கணவா் உயிரிழந்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்டப்பட்டினத்தை சோ்ந்தவா் கலைவேந்தன் (32). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவரது மனைவி இளவரசி (30). இவா், சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தாா். இவா்கள் இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவரும் சிதம்பரம் காவலா் குடியிருப்பில் வசித்து வந்தனா்.

சிதம்பரம் அருகே வீரன்கோயில்திட்டு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கணவா் கலைவேந்தனுடன் பைக்கில் உதவி ஆய்வாளா் இளவரசி சென்றாா்.

சித்தலாப்பாடி அருகே இவா்களது பைக் சென்றபோது, கொடியம்பாளையத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு நகரப் பேருந்து திடீரென மோதியது. இதில், பைக் சுமாா் 100 மீட்டா் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த இளவரசி, கலைவேந்தன் ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

விபத்து குறித்து தகவலறிந்து வந்த அண்ணாமலைநகா் போலீஸாா், இருவரின் சடலங்களையும் மீட்டு, உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து தொடா்பாக அண்ணாமலைநகா் காவல் நிலைய ஆய்வாளா் கே.அம்பேத்கா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com