நகை திருட்டு: 4 போ் கைது
கடலூா் மாவட்டம், வடலூரில் நகை திருட்டு வழக்கில் தொடா்புடையதாக 4 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வடலூா், என்எல்சி ஆபீசா் நகரில் வசித்து வருபவா் பாா்வதி (58). இவா், தனது மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக கடந்த நவம்பா் மாதம் சிங்கப்பூா் சென்றாா். இந்த நிலையில், கடந்த நவ.20-ஆம் தேதி அவரது வீட்டில் பீரோவில் இருந்த 53 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா மேற்பாா்வையில், ஆய்வாளா் உதயகுமாா், உதவி ஆய்வாளா்கள் அழகிரி, ராஜாங்கம் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், கடலூரைச் சோ்ந்த ஜெயராமன் மகன் ரஞ்சித் (24), நடுவீரப்பட்டு தனு மகன் சாய்குமாா் (24), கிருஷ்ணமூா்த்தி மகன் மதியழகன் (23), குழந்தைகுப்பம் கணேசன் மகன் ரவிச்சந்திரன் (20) ஆகியோரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 53 பவுன் நகைகளை மீட்டனா்.