குவாரியில் முறைகேடு: கோட்டாட்சியரிடம் மனு
கடலூா் அடுத்த திருவந்திபுரம் கிராமத்தில் உள்ள குவாரியில் நடைபெறும் முறைகேடுகளை தடுத்து நிறுத்தக்கோரி கடலூா் கோட்டாட்சியா் அபிநயாவிடம் கடலூா் மாமன்ற உறுப்பினா் சரவணன் செவ்வாய்க்கிழமை மனு அளித்தாா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவந்திபுரம் கிராமத்தில் உள்ள குவாரியில் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சுமாா் 60 அடி ஆழத்துக்கு கிராவல் மண் வெட்டி எடுக்கப்படுகிறது. 10 ஏக்கா் அளவுக்கு குவாரியை சட்ட விரோதமாக விரிவுப்படுத்தி கனிம வளத்தை கொள்ளையடித்து விற்பனை செய்யப்படுகிறது.
இதனால், விவசாய நிலங்களில் நீா் பாய்ச்சுவதற்கு இடையூறாகவும், வாகனங்களில் அதிக அளவு கனிம வளங்களை ஏற்றிச் செல்வதால் சாலைகள் சேதமடைந்து விவசாய பணிகளுக்கு பயன்படாத நிலையில் உள்ளது. மேலும், அங்குள்ள அரசு புறம்போக்கு செம்மண் மலையை ஆக்கிரமித்து செம்மண்ணையும், குவாரியில் 60 அடிக்கு கீழ் உள்ள வெள்ளை களிமண்ணையும் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கின்றனா். எனவே, குவாரியை ஆய்வு செய்து, உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.