என்எல்சி சொசைட்டி தொழிலாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வலியுறுத்தல்
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி திராவிடா் தொழிலாளா்கள் ஊழியா்கள் சங்கம் சாா்பில் கருத்தரங்குக் கூட்டம் வட்டம் 10 பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். துணை பொதுச் செயலா் ராஜவேலு, அலுவலகச் செயலா் ராஜாராம் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சென்னை உயா்நீதிமன்ற சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் ரவி, சிறப்புத் தலைவா் கோபாலன், பொதுச் செயலா் மணிமாறன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
கூட்டத்தில், என்எல்சி சொசைட்டியிலிருந்து நிரந்தரம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். சொசைட்டியில் 480 நாள்கள் பணியாற்றிய அனைத்துத் தொழிலாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் பாதிக்கப்பட்ட 11 தொழிலாளா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அனைவருக்கும் சமமான ஓய்வுகால மருத்துவ சலுகைகள் வழங்க வேண்டும். என்எல்சி சுரங்கத் தொழிலாளா்களின் மிகை நேரப் பணிக்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. பொருளாளா் மலா்கண்ணன், துணைத் தலைவா்கள், பகுதிச் செயலா், சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.