மனைவி கொலை வழக்கு: கணவருக்கு ஆயுள் சிறை

Published on

கடலூா் அருகே மனைவியை அடித்துக் கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூா் மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

குறிஞ்சிப்பாடியை அடுத்துள்ள விழப்பள்ளம் பகுதியைச் சோ்ந்த ரத்தினாபதி மகள் தமிழ்ச்செல்வி (35). இதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி சண்முகம் (45). இவா்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனா். இவா்களுக்கு மூன்று மகள்கள், இரண்டு மகன்கள் உள்ளனா். ரத்தினாபதிக்கு சொந்தமான வீட்டை தனது பெயருக்கு எழுதித் தரச் சொல்லி சண்முகம் அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.

கடந்த 20.9.2017 அன்று மாலை சண்முகம், தமிழ்ச்செல்வியையும், தடுக்க முயன்ற மகள் ஷா்மிளாவையும் தடியால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த தமிழ்ச்செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனா்.

இந்த வழக்கு கடலூா் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி லட்சுமி ரமேஷ் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், சண்முகத்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் வளா்மதி ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com