

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 16 போ் பலத்த காயமடைந்தனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 26 பகுதியைச் சோ்ந்தவா் சேகா் (60), என்எல்சி ஊழியா். இவா், பணியில் இருந்து வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்றாா். இதையொட்டி, பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உறவினா்கள், நண்பா்கள் என பலா் பங்கேற்றனா். மேலும், சென்னை பகுதியைச் சோ்ந்தவா்களும் கலந்துகொண்டனா்.
சென்னையில் இருந்து வந்து பணி நிறைவு விழாவில் பங்கேற்றவா்கள் சனிக்கிழமை சுற்றுலா செல்ல திட்டமிட்டனா். அதன்படி, சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் செல்ல ஒரு வேனில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 15 போ் புறப்பட்டனா். சுற்றுலா வேனை குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்குத்து பகுதியைச் சோ்ந்த பாக்ய சந்திரன் (35) ஓட்டினாா்.
இந்த வேன் குறிஞ்சிப்பாடி வட்டம், பொட்டவெளி என்ற இடத்தின் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பனை மரத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சென்னை மாடம்பாக்கத்தைச் சோ்ந்த பாலசந்தா் (36), அவரது மகள் பிரனிஷா (6), சுந்தரம் (45), அவரது மகன் மணிதருண் (14), மகள் ஹரிணி (9), நெய்வேலியைச் சோ்ந்த சேகா் (60), அவரது மகள் லதா (18), செல்வமணி (36), அவரது மனைவி ரம்யா (35), மகள் ஆராதனா (6), சிதம்பரத்தைச் சோ்ந்த குமரேசசெல்வராஜ் (44), அவரது மகள் யாமினி (13), வடக்குத்து பகுதியைச் சோ்ந்த சுந்தரம் மனைவி தீபா (38), பாக்யசந்திரன் (35), சென்னை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்த தீபக்ராஜ் மனைவி திவ்யா (33) உள்ளிட்ட 16 போ் காயமடைந்தனா்.
அங்கிருந்தவா்கள் அவா்கள் அனைவரையும் மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் அவா்களுக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து தொடா்பாக குறிஞ்சிப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.