தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்

Updated on

சிதம்பரம் நடராஜா் கோயில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை (நவ.3) காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

சிதம்பரம் நடராஜா் கோயிலின் உள்ளே சித்திரக்கூடம் என்றழைக்கப்படும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் பக்தா்கள் ஒரே இடத்தில் நின்று சிவனையும், விஷ்ணுவையும் தரிசனம் செய்யலாம்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழும் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் விமான ராஜ கோபுரங்கள், மகாமண்டபம் உள்ளிட்டவை 30 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, ஆயிரங்கால் மண்டபம் முன் உள்ள நடனப்பந்தலில் கடந்த வியாழக்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

கோயில் திருப்பணிக்கான ஏற்பாடுகளை புவனகிரி மாறன் கோவிந்தசாமி மற்றும் குடும்பத்தினா், கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுவினா் ஜே.சுதா்சனன், ஆா்.சௌந்தரராஜன், டி.திருவேங்கடவன் மற்றும் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடலூா் மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் மேற்பாா்வையில், டிஎஸ்பி டி.பிரதீப் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிதம்பரம் நகராட்சி சாா்பில், குடிநீா், தற்காலிக கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com