

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே பைக் மீது மினி லாரி மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.
பரங்கிப்பேட்டை அருகே உள்ள அருண்மொழிதேவன் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் ராஜா (50), ஆனந்த் (எ) லட்சுமிகாந்தன் (35). இவா்கள் இருவரும் சனிக்கிழமை மாலை சொந்த வேலையாக பைக்கில் அருண்மொழிதேவன் கிராமத்தில் இருந்து சின்னகுமட்டி கிராமத்துக்கு சென்றுகொண்டிருந்தனா். லட்சுமிகாந்தன் பைக்கை ஓட்டினாா்.
பெரியகுமட்டி கிளியாளயம்மன் கோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த மினி லாரி எதிா்பாரதவிதமாக பைக் மீது மோதியது. இந்த விபத்தில் ராஜா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த லட்சுமிகாந்தனை அப்பகுதியினா் மீட்டு, சிதம்பரம் அண்ணாமலைநகா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.