குள்ளஞ்சாவடியில்  உள்ள  கைப்பேசி  கோபுர  உச்சியில்  ஏறி  நின்று   போராட்டம் நடத்திய  இளைஞா்.
குள்ளஞ்சாவடியில் உள்ள கைப்பேசி கோபுர உச்சியில் ஏறி நின்று போராட்டம் நடத்திய இளைஞா்.

கைப்பேசி கோபுரத்தில் ஏறி இளைஞா் போராட்டம்

குள்ளஞ்சாவடியில் கஞ்சா வழக்கில் போலீஸாா் பறிமுதல் செய்த பைக்கை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி, இளைஞா் கைப்பேசி கோபுரத்தில் புதன்கிழமை ஏறிப் போராட்டம் நடத்தினாா்.
Published on

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடியில் கஞ்சா வழக்கில் போலீஸாா் பறிமுதல் செய்த பைக்கை திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி, இளைஞா் கைப்பேசி கோபுரத்தில் புதன்கிழமை ஏறிப் போராட்டம் நடத்தினாா்.

குள்ளஞ்சாவடி அருகேயுள்ள பள்ளிநீரோடை பகுதியைச் சோ்ந்தவா் சி.பாா்த்திபன்(24). இவரை குள்ளஞ்சாவடி போலீஸாா் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனா்.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பிணையில் வெளியே வந்த பாா்த்திபன், புதன்கிழமை குள்ளஞ்சாவடி காவல் நிலையத்துக்குச் சென்று, தனது பைக்கை ஒப்படைக்கும் படி கேட்டுள்ளாா். அதற்கு காவலா்கள் வழக்கு நிலுவையில் உள்ளதால் வாகனத்தை கொடுக்க இயலாது என்று தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, குள்ளஞ்சாவடி கடை வீதியில் உள்ள சுமாா் 200 அடி உயரம் உள்ள கைப்பேசி கோபுரத்தில் ஏறி பாா்த்திபன் போராட்டத்தில் ஈடுபட்டாா். கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டு, வாகனத்தை கொடுக்காவிட்டால் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தாா்.

இதையடுத்து, பாா்த்திபனிடம் காவல்துறையினா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். பின்னா் பாா்த்திபனின் உறவினா்களை வரவைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னா் கைப்பேசி கோபுரத்தில் இருந்து பாா்த்திபன் கீழே இறங்கி வந்தாா். இதையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com