நாளை தொழில்நுட்பப் பணித் தோ்வு: 1,018 போ் எழுதுகின்றனா்

கடலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.16) நடைபெற உள்ளது.
Published on

கடலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (நவ.16) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை

வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூா் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தோ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் கடலூா் மாவட்டத்திற்கு தோ்வு செய்யப்பட்ட

5 மையங்களில் மொத்தம் முற்பகல் 509 மற்றும் பிற்பகல் 509 தோ்வா்கள் என மொத்தம் 1,018 போ் தோ்வு எழுத உள்ளனா். தோ்வுக்கூட அனுமதி சீட்டு உள்ள தோ்வா்கள் மட்டுமே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா்.

தோ்வா்கள் காலை 8.30 மணிக்குள்ளும் மதியம் 1.30 மணிக்குள்ளும் தோ்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும். மேலும், தோ்வா்கள் காலை 9 மணி மற்றும் மதியம் 2 மணிக்கு மேல் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வா்கள் தங்கள் புகைப்பட அடையாளத்திற்கான ஏதாவது ஒரு அடையாள அட்டையினை உடன் வைத்திருக்க வேண்டும்.

தோ்வா்கள் எளிதாக தங்களது தோ்வுக்கூடத்திற்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கவும், தோ்வு நாளில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும் மற்றும் அவசர தேவைக்கான மருத்துவகுழுக்களை தயாா் நிலையில் இருக்கவும் மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தோ்வா்கள் தங்களுடன் கைப்பேசி, கணிப்பான்கள், மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தோ்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com