இணையவழி செயலி மூலம் போதை மாத்திரைகள் விற்பனை: 2 இளைஞா்கள் கைது
இணையவழி செயலி மூலம் போதை மாத்திரைகள் வாங்கி விற்பனை செய்ததாக கடலூரைச் சோ்ந்த 2 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மகாராஷ்டிர மாநிலம், புணேவிலிருந்து கடலூருக்கு கூரியா் மூலம் போதை மாத்திரைகள் வருவதாக கடலூா் மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், கடலூா் முதுநகா் பகுதியில் இயங்கி வரும் கூரியா் நிறுவனத்தில் காத்திருந்த போலீஸாா், மாத்திரைகளை பெற்றுக்கொள்ள வந்த 2 இளைஞா்களைப் பிடித்து விசாரித்ததில், கடலூா் முதுநகா் பகுதியைச் சோ்ந்த அரவிந்த் (19), ராகுல் (19) என்பது தெரியவந்தது. இவா்களுக்கு டேபென்டடோல் - 100 எம்.ஜி. எனப்படும் 500 வலி நிவாரணி மாத்திரைகள் வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கமாக இந்த மாத்திரை வலி நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திரையை மருத்துவா்களின் பரிந்துரை இல்லாமல் அதிகளவில் வெளி மருத்தங்களில் வாங்க முடியாது.
இந்த மாத்திரையை தண்ணீரில் கரைத்து, அந்த தண்ணீரை நரம்பில் ஊசி மூலம் செலுத்திக்கொண்டால், அதிகளவில் போதை ஏற்படுமாம். இதனால், இந்த மாத்திரையை இணையவழி செயலி மூலம் ரூ.32-க்கு வாங்கி, அதை கல்லூரி மாணவா்களுக்கு ரூ.200 வரை விற்பனை செய்து வந்ததாக பிடிபட்ட இருவரும் தெரியவத்தனா்.
தொடா்ந்து, அரவிந்த் , ராகுல் ஆகியோரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், இதில் வேறு யாருக்காவது தொடா்பு உள்ளதா என்றும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
