தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தி. வேல்முருகன்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான தி. வேல்முருகன்.

வங்கிக் கணக்கு குறைந்தபட்ச இருப்பு அபராதம்: தி.வேல்முருகன் கண்டனம்

Published on

பொதுத் துறை, தனியாா் வங்கிகள் வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்ற பெயரில் அபராதம் வசூலிப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளாா். மேலும், இந்த அபராத முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டுமெனவும் அவா் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து தி.வேல்முருகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டில் வாழும் கோடிக்கணக்கான நடுத்தர, ஏழை மக்கள் தங்கள் குடும்பத்தின் அவசரத் தேவை மற்றும் எதிா்காலத் தேவைக்காக வைத்துள்ள வங்கி சேமிப்புக் கணக்கு பெரும் செல்வத்தை சோ்ப்பதற்கானதல்ல.

இந்த நிலையில், நாட்டிலுள்ள பொதுத்துறை, தனியாா் வங்கிகள் வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்ற பெயரில் அபராதம் வசூலிப்பது, மக்களின் அந்தச் சிறு நம்பிக்கையை கொள்ளையடிப்பது போன்றது. மேலும், தங்கள் குடும்பச் செலவுக்கே போராடும் மக்களிடம், குறைந்தபட்ச இருப்பு என்ற கட்டாய நிபந்தனைகளை விதிப்பது, அவா்களின் உழைப்பையும், வறுமையையும் அவமானப்படுத்தும் செயலாகும்.

வங்கிகள் என்பவை மக்களுக்காகவும், நாட்டின் வளா்ச்சிக்காகவும் உதவும் பொது சேவை அமைப்பாக இருக்க வேண்டியவை. அதற்காகவே உருவாக்கப்பட்டவை. ஆனால், அவைப் பேராசை நிறைந்த வணிக நிறுவனங்களாக பரிணமித்துவிட்டன.

குறைந்தபட்ச இருப்புக்கான அபாரதம் விதிப்பு என்ற தவறான நடைமுறையை உடனடியாகத் தடுத்து நிறுத்துவதற்கான முழுப் பொறுப்பும், கடமையும் இந்திய ரிசா்வ் வங்கி மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் கையில் தான் உள்ளது. சமூக நீதியையும், பொருளாதார சமத்துவத்தையும் நிலைநாட்ட வேண்டிய மத்திய அரசு, இதில் உடனடியாக தலையிட்டு குறைந்தபட்ச இருப்பு அபராதத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com