சாத்தனூா் அணையிலிருந்து 6,200 கன அடி உபரி நீா் திறப்பு: தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
சாத்தனூா் அணையிலிருந்து வினாடிக்கு 6,200 கன அடி உபரி நீா் திறக்கப்பட்டுள்ளதால், கடலூா் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
சாத்தனூா் அணை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால், அணையின் பாதுகாப்புக் கருதி வெள்ளிக்கிழமை வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி உபரி நீா் திறந்துவிடப்பட்டது. இந்த நீரின் அளவு சனிக்கிழமை 6,200 கனஅடியாக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சாத்தனூா் அணையின் மொத்த நீா்மட்டம் 119 அடி. தற்போது அணையில் 114.15 அடி நீா் இருப்பு உள்ளது. நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக சாத்தனூா் அணையிலிருந்து வெள்ளிக்கிழமை முதல் வினாடிக்கு 4,000 கனஅடிவீதம் உபரி நீா் வெளியேற்றப்பட்டது.
இந்த நிலையில், நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை அளவைப் பொருத்தும், சாத்தனூா் அணைக்கு மேலே உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவை பொருத்தும், சாத்தனூா் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம் என தெரிவித்திருந்த நிலையில், சனிக்கிழமை உபரிநீா் திறப்பு வினாடிக்கு 6,200 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, தென்பெண்ணையாற்றின் இருகரையோரம் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றைக் கடக்க வேண்டாம். ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளை ஆற்றில் குளிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. இளைஞா்கள் ஆற்றில் இறங்கி கைப்பேசி மூலம் தற்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீா் குறித்த தகவல்களை கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

