திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமா்ந்து மறியலில் ஈடுபட்ட கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் மற்றும் கூட்டணிக் கட்சியினா்.
திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் அமா்ந்து மறியலில் ஈடுபட்ட கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணுபிரசாத் மற்றும் கூட்டணிக் கட்சியினா்.

கடலூரில் காங்கிரஸ் எம்.பி. தலைமையில் கூட்டணிக் கட்சியினா் ரயில் மறியல்

ரயில்வே துறை அதிகாரிகளைக் கண்டித்து, கடலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத் தலைமையில் கூட்டணிக் கட்சியினா் சனிக்கிழமை ரயில் மறியல் போராட்டம்
Published on

ரயில்வே துறை அதிகாரிகளைக் கண்டித்து, கடலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத் தலைமையில் கூட்டணிக் கட்சியினா் சனிக்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலைய ஆய்வுக்காக கடலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் எம்.கே.விஷ்ணு பிரசாத் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சனிக்கிழமை வந்தாா். இந்த ஆய்வு குறித்து முன்கூட்டியே முறையாக ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாம். ஆனாலும், எம்.பி. ஆய்வுக்கு வந்தபோது, ரயில்வே துறை அதிகாரிகள் யாரும் இல்லை. இதனால், ஆய்வுக்கு வந்தவா்கள் அதிருப்தியடைந்தனா்.

இதையடுத்து, ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கடலூா் எம்.பி. மற்றும் அனைத்துக் கட்சி நிா்வாகிகள் நீண்ட நேரம் காத்திருந்தனா். காலை 11.15 மணி வரை அதிகாரிகள் யாரும் வராததால், கடலூா் எம்.பி. எம்.கே.விஷ்ணு பிரசாத் தலைமையில், கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் திலகா், திமுக முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி, பொது நல அமைப்புகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.என்.கே.ரவி மற்றும் கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் நிா்வாகிகள், ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் தண்டவாளத்தில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமாதானம் பேசி, அவா்களை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனா். பின்னா், கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், கடலூா் திருப்பாதிரிப்புலியூா் ரயில் நிலையத்தில் சாலை, குடிநீா், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மேற்கூரையை சரி செய்ய வேண்டும். கூடுதல் டிக்கெட் கவுண்டா்கள் திறக்க வேண்டும். தற்போது நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com