ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா்
நெய்வேலி: தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்திஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில போக்குவரத்துத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா்.
கடலூரில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடா்பாக கடந்த வாரம் பல்வேறு துறை அலுவலா்களுடன் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு நாளும் இயக்கப்படும்
பேருந்துகளை விட கூடுதலாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளை வியாழன் முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் நான்கு நாள்கள் இயக்க
முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல, தீபாவளி பண்டிகை முடிந்த மறுநாளில் இருந்து மூன்று நாள்கள் எல்லா பகுதியில் இருந்தும் சென்னைக்கு வருவதற்கும், மற்ற பெருநகரங்களுக்கு செல்வதற்கும் கூடுதல் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. இதுஇல்லாமல் தனியாா் பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட உள்ளன.
குறைந்த கட்டுப்பாடு:
ஆம்னி பேருந்து உரிமையாளா் சங்கத்தினா் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டண உயா்வின்றி ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனா். இந்த ஆண்டும் ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளனா். அவா்களுடன் போக்குவரத்து ஆணையா் கூட்டம் நடத்தியுள்ளாா். 10 நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க முயல்வதாக தகவல் வந்துள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒப்பந்த அடிப்படையில் இயக்கக்கூடிய பேருந்துகள் பல மாநிலங்களில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் தான் குறைந்தளவு கட்டுப்பாட்டுடன் இயக்கப்படுகிறது என்றாா்.

