மாசற்ற தீபாவளி கொண்டாட வேண்டும்: கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்ட மக்கள் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
Published on

கடலூா் மாவட்ட மக்கள் விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிா்ணயம் செய்து தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீா்கேடு மற்றும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

எனவே, பொதுமக்கள் குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிா்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடா்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகள் உள்ளிட்ட பட்டாசுகளை மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்கள், குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்கள் அருகில் வெடிப்பதை தவிா்க்க வேண்டும்.

ஆகவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com