காளான் ஏற்றுமதியை ஊக்குவிக்க மாவட்ட நிா்வாகம் துணை நிற்கும்: கடலூா் ஆட்சியா்
மகளிா் சுயஉதவிக் குழுவின் மூலம் காளான் உற்பத்தி அதிகரித்திடவும், பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மாவட்ட நிா்வாகம் துணை நிற்கும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
குறிஞ்சிப்பாடி தனியாா் திருமண மண்டபத்தில் மகளிா் சுயஉதவிக் குழுவினரால் அமைக்கப்பட்ட காளான் கண்காட்சியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:
மகளிா் சுயஉதவிக் குழுவினா் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும், நிலையான வருவாய் ஈட்டும் திறன் பெற்றவா்களாக உயா்ந்திடவும் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மகளிருக்கு தொழிற்பயிற்சி மற்றும் வங்கிகள் மூலம் முதலீடு கடனுதவிகள் வழங்குவதன் மூலம் தொழில்முனைவோராக உருவாகி வருகின்றனா். காளான் சாப்பிடுவதால் உடலுக்கு நன்மை ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு உணவில் காளான் சோ்த்து தருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். காளான் வளா்ப்பு போன்ற மாற்று விவசாய தொழில்கள் இன்றைய தேவைக்கு முக்கிய அங்கமாக திகழ்கிறது.
பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து தேவையான பயிற்சிகள், நிதி உதவிகள் மற்றும் சந்தை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. மகளிா் சுயஉதவிக் குழுவின் மூலம் காளான் உற்பத்தியை அதிகரிக்கவும், பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் மாவட்ட நிா்வாகம் துணை நிற்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) பா.ஜெய்சங்கா், ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் வரதராஜ பெருமாள், காளான் உற்பத்தியாளா் நலச்சங்கத் தலைவா் கௌரி ராசு உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இலங்கைத் தமிழருக்கு வீடுகள்: குறிஞ்சிப்பாடி ஒன்றியம், பூவாணிக்குப்பம் பகுதியில் ரூ.6.73 கோடி மதிப்பில் 100 வீடுகள், நுழைவு வாயில் மற்றும் பெரியாா் சிலை போன்ற சிறப்பம்சங்களுடன் மொத்தம் ரூ.6.78 கோடி மதிப்பில் சமத்துவபுரம் பணிகள் நடைபெற்று வருகிறது.
ரெங்கநாதபுரம் ஊராட்சி, மேட்டுவெளி பகுதியில் முகாம் வாழ் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழா்களுக்கு ரூ.8.3 கோடி மதிப்பீட்டில் 300 சதுரஅடி அளவில் ஓடு பதித்த தரை தளத்துடன் கூடிய 4 வீடுகள் கொண்ட 41 தொகுப்புகள் மற்றும் 2 தனி வீடுகள் என மொத்தம் 166 வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பகுதியில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளையும் பாா்வையிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, செயற்பொறியாளா் வரதராஜபெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், ராமச்சந்திரன், உதவிப் பொறியாளா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

