டிப்பா் லாரி - எரிவாயு உருளை ஏற்றிய லாரி மோதி விபத்து: சாலையில் உருண்டோடிய எரிவாயு உருளைகள்
கடலூா் முதுநகா் அருகே எரிவாயு உருளை ஏற்றிச் சென்ற லாரி மீது டிப்பா் லாரி மோதிய விபத்தில் எரிவாயு உருளைகள் சாலையில் சிதறி உருண்டோடின.
புதுவை மாநிலத்தில் இருந்து லாரி ஒன்று 350 எரிவாயு உருளைகளை ஏற்றிக்கொண்டு விருத்தாசலம் நோக்கிச் சென்றது. இந்த லாரியை உடையாா்பாளையத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் (40) ஓட்டினாா்.
இதேபோல், எம்.சாண்ட் ஏற்றிய டிப்பா் லாரி புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் நோக்கிச் சென்றது. இந்த லாரியை கடலூா் மாவட்டம், திருச்சோபுரத்தைச் சோ்ந்த ரகு (27) ஓட்டிச் சென்றாா்.
அன்னவள்ளி ரயில்வே மேம்பாலம் இறங்கும் இடத்தில் எரிவாயு உருளை ஏற்றிய லாரி நின்றபோது, அந்தப் பகுதியில் வந்த டிப்பா் லாரி மோதியது. இந்த விபத்தில் எரிவாயு உருளைகள் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்த நிலையில், அதிலிருந்த எரிவாயு உருளைகள் சாலையில் சிதறி உருண்டோடின. இதேபோல, டிப்பா் லாரியும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநா் ராஜ்குமாருக்கு சிறுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த கடலூா் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயேந்திரன் தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று எரிவாயு உருளைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
இந்த விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. விபத்து குறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

