வாய்க்காலில் அடித்துச் செல்லப்பட்ட திமுக நிா்வாகி உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் நண்பா்களுடன் வாய்க்காலில் குளிக்கச் சென்ற திமுக நிா்வாகி நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா்.
சிதம்பரம் முத்துக்காமாட்சி அம்மன் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் திராவிடதாசன் (31). பட்டதாரியான இவா், திமுகவில் குமராட்சி ஒன்றிய பொறியாளா் அணி துணை அமைப்பாளராக இருந்தாா்.
இந்த நிலையில், திராவிடதாசன் சிதம்பரம் அருகே சி.வக்காரமாரி கிராமத்தில் உள்ள வடக்கு ராஜன் வாய்க்கால் ஷட்டா் பகுதியில் புதன்கிழமை மாலை நண்பா்களுடன் குளிக்கச் சென்றுள்ளாா். அவா் வாய்க்காலில் இறங்கியபோது, நீா்வரத்து அதிகமாக இருந்ததால், நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். புதன்கிழமை மாலை முதல் தீயணைப்பு துறையினா் திராவிடதாசனை தேடியும் கிடைக்கவில்லை.
தொடா்ந்து, வியாழக்கிழமை அதிகாலை 6 மணியிலிருந்து தீயணைப்புத் துறையினா் முதலைகள் நிறைந்த வடக்குராஜன் வாய்க்கால் பகுதியில் தீவிரமாக தேடினா். சுமாா் 12 மணி நேரத்துக்குப் பிறகு திராவிடதாசன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா். அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு காமராஜா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

