கடலூா் விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய அழைப்பு
கடலூா் விவசாயிகள் சிறப்பு மற்றும் ரபி பருவ பயிா் காப்பீடு செய்ய, கடலூா் வேளாண்மை இணை இயக்குநா் மு.லட்சுமிகாந்தன் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடலூா் விவசாயிகளுக்கு சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த அரசாணை பெற்று, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலூா் மாவட்டத்திலுள்ள விவசாயிகள், நடப்பு சிறப்பு மற்றும் ரபி பருவத்தில் பயிா் காப்பீடு செய்ய சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவா்கள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றைக் கொண்டு, இ-சேவை மையம் வாயிலாக பயிா் காப்பீடு செய்யலாம். இதன் மூலம் இயற்கை இடா்பாடுகளால்ஏற்படும், பயிா் மகசூல் இழப்பிலிருந்துபீட்டிலிருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.
திட்டத்தில் இணைவதற்கான தகுதி: அனைத்து விவசாயிகளும் (குத்தகைதாரா் உட்பட) பயிா் காப்பீடு செய்யலாம். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிா்களுக்கு பயிா்க்கடன் பெறும் விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பயிா்காப்பீடுதிட்டத்தில் சேரலாம். பயிா்க்கடன், வேளாண் நகைக்கடன் பெறாத விவசாயிகள் தங்கள் விருப்பத்தின் பேரில் பயிா் காப்பீடு திட்டத்தில் சேரலாம்.
முன்மொழிவுப் படிவம். விண்ணப்பப் படிவம். கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் பயிா் சாகுபடி அடங்கல் (அ) இ அடங்கல். ஆதாா் அட்டை நகல். ஆதாா் எண் இணைக்கப்பட்ட மற்றும் வங்கிக்கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகிய ஆவணங்களை சமா்பிக்க வேண்டும்.
கட்டணம் செலுத்தும் இடங்கள்: அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள். அரசு பொது சேவை மையங்களில் காப்பீடு கட்டணம் செலுத்தலாம்.பயிா் காப்பீடு செய்ய ஏக்கா் ஒன்றுக்கு சம்பா நெற்பயிருக்கு ரூ.564, மக்காச்சோளத்திற்கு ரூ.380, பருத்திக்கு ரூ.449, உளுந்துக்கு ரூ.255 செலுத்த வேண்டும். காப்பீடு செய்ய மக்காச்சோளத்திற்கு வரும் 31-ஆம் தேதியும், சம்பா நெல் , பருத்தி, உளுந்திற்கு நவம்பா் 15-ஆம் தேதியும் கடைசி நாளாகும். இதுகுறித்த சந்தேகங்களுக்கு , அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் என்று தெரிவித்துள்ளாா்.
