புரட்டாசி நிறைவு: போட்டிபோட்டு மீன்கள் வாங்கிய மக்கள்
புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில், கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் திரண்ட ஏராளமான மக்கள் போட்டிபோட்டு மீன்களை வாங்கிச் சென்றனா்.
பெருமாளுக்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுவதால், பொதுமக்கள் பலா் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதைத் தவிா்த்து விரதம் இருந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
புரட்டாசி மாதம் கடந்த 17-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது ஐப்பசி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே வியாபாரிகள், பொதுமக்கள் ஏராளமானோா் குவிந்தனா்.
கடலூா் வங்கக் கடல் கரையோர பகுதிகளில் வசிக்கும் மீனவா்கள் கடலுக்குச் சென்று ஞாயிற்றுக்கிழமை அதிகளவு மீன்களுடன் கரை திரும்பினா். புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் தவிா்த்த அசைவப் பிரியா்கள் மீன்களை போட்டிபோட்டு வாங்கிச் சென்றனா்.
பொதுமக்கள் அதிகளவில் குவிந்தாலும், மீன்கள் எப்போதும்போல வழக்கமான விலைக்கே விற்பனை செய்யப்பட்டன. அ ந்த வகையில், வஞ்சிரம் ரூ.800, சங்கரா ரூ.400, கொடுவா ரூ.350, இறால் ரூ.250, நண்டு ரூ.400 என்ற விலையில் மீன்கள் விற்பனையாயின.
