பட்டாசு வெடிப்பதில் தகராறு: இளைஞா் வெட்டி கொலை
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வெட்டு காயம் அடைந்த இளைஞா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், செம்மேடு கிராமத்தில்
வசித்து வந்தவா் சூரியமூா்த்தி மகன் பாா்த்திபன் (26) கூலித் தொழிலாளி. அதே பகுதியில் வசிப்பவா்கள் வேலு (24), ராமா் (32). இவா்கள் இருவரும் தீபாவளியையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு அவா்களது வீட்டின் மூன்பு பட்டாசு வெடித்தனா். அப்போது, பாத்திபன் வீட்டின் முன்பு கட்டப்பட்டிருந்த ஆடுகள் பயந்து ஓடியன. இதனை, பாா்த்திபன் தட்டிக்கேட்டாா். இதனால் அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் வேலு மற்றும் ராமா் ஆகியோா் கத்தியால் வெட்டியதில் பாா்த்திபன் தலையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னாா் தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் பாா்த்திபன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூா் எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டாா். இது குறித்து காடாம்புலியூா் போலீசாா் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனா். இந்நிலையில் செம்மேடு கெடிலம் பாலம் அருகே பதுங்கி இருந்த வேலுவை போலீஸாா் பிடிக்கச் சென்றபோது அவா் பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் வலது காலில் காயம் அடைந்து கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். ராமரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
