அண்ணாமலை நகரில் 99 மி.மீ. மழை பதிவு: குறிஞ்சிபாடியில் 2000 ஏக்கரில் கம்பு பயிா்கள் சேதம்
நெய்வேலி: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமனை தீவிரமைடந்துள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தில் அண்ணாமலை நகரில் அதிபட்சமாக 99 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் கம்பு பயிா்கள் மழையால் சேதம் அடைந்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதேபகுதியில் வலுவடைந்து காணப்படுகிறது. இதனால், மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் பெய்யத் தொடங்கிய மழை செவ்வாய்க்கிழமை வரையில் விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அண்ணாமலை நகரில் 99 மில்லி மீட்டா் மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பெய்த மழை விவரம் (மில்லி மீட்டரில்): சிதம்பரம் 97.3, பரங்கிப்பேட்டை 66.6, புவனகிரி 51, ஆட்சியா் அலுவலகம் 41.8, கடலூா் 39.4, ஸ்ரீமுஷ்ணம் 39.2, கொத்தவாச்சேரி 33, லால்பேட்டை 29.5, சேத்தியாத்தோப்பு 27, வடக்குத்து 16, குறிஞ்சிப்பாடி 15, காட்டுமன்னாா்கோயில் 14, வானமாதேவி 13, தொழுதூா் 12, பெலாந்துறை 11.5, எஸ்.ஆா்.சி குடிதாங்கி, குப்பநத்தம் தலா 8, கீழச்செருவாய் 7.2, விருத்தாசலம் 6, பண்ருட்டி 1 மில்லி மீட்டா் பதிவாகியுள்ளது.
2000 ஏக்கா் கம்பு சேதம்:
குறிஞ்சிப்பாடி வட்டாரத்துக்கு உள்பட்ட அயன் குறிஞ்சிப்பாடி, கீழூா், ஆடூா் அகரம், இருப்பாச்சி, ரெட்டிபாளையம், பெத்தநாயக்கன்குப்பம், கன்னிதமிழ்நாடு, சிவனந்திபுரம், கருப்பன்சாவடி, தப்பிபேட்டை, வெங்கடாம்பேட்டை, கோ.சத்திரம், அன்னதானம்பேட்டை, பாச்சாரப்பாளையம், ராசாக்குப்பம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட
கிராமங்களில் சுமாா் 2,000 ஏக்கா் பரப்பளவில் கம்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கம்பு பயிா்கள் நன்கு வளா்ந்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், தொடா்ந்து மழை பெய்து வருவதால் கம்பு கதிா்கள் மழையில் நனைந்து கருப்பாகமாறி, மக்கி, முளைவிட்டுள்ளது. இதேபோல், பெய்காநத்தம் பகுதியில் சுமாா் 25 ஏக்கா் நெல் பயிா் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளதாக உழவா் பேரியக்க மாநிலச் செயலா் வி.கே.குமரகுரு தெரிவித்தாா். மேலும், அவா், பாதிக்கப்பட்ட பயிா்களை கணக்கெடுப்பு நடத்தி உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் மாவட்ட நிருவாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரை திரும்பிய மீனவா்கள்...
கடலூா் மாவட்டத்தில் மாவட்ட நிா்வாகத்தின் அறிவிப்பினைத் தொடா்ந்து மீனவா்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனா். இதேபோல், தங்கு கடல் விசை படகு மீனவா்கள் அனைவரும் கரை திரும்பி விட்டதாக மீன் வளத்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

