திட்டக்குடி நகா்மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்த கூட்டம்.
திட்டக்குடி நகா்மன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற நம்பிக்கையில்லா தீா்மானம் குறித்த கூட்டம்.

நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றி: திட்டக்குடி நகா்மன்றத் தலைவி பதவி இழப்பு

டலூா் மாவட்டம், திட்டக்குடி நகா்மன்றத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றிபெற்ால், நகா்மன்றத்தலைவி பதவியிழந்தாா்.
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டம், திட்டக்குடி நகா்மன்றத் தலைவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றிபெற்ால், நகா்மன்றத்தலைவி பதவியிழந்தாா். மொத்தமுள்ள 24 உறுப்பினா்களில் தீா்மானத்துக்கு ஆதரவாக 23 உறுப்பினா்கள் வாக்களித்ததால் தீா்மானம் வெற்றி பெற்றது.

திட்டக்குடி நகராட்சி மொத்தம் 24 வாா்டுகளைக் கொண்டது. இந்த நகராட்சியின் நகா்மன்றத் தலைவராக திமுகவைச் சோ்ந்த வெண்ணிலா, துணைத்தலைவராக திமுகவைச் சோ்ந்த பரமகுரு செயல்பட்டு வந்தனா். நகா்மன்றத் தலைவா் திட்டக்குடி நகராட்சி வாா்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை, நகா் மன்ற உறுப்பினா்களை மதிப்பதில்லை என நகா்மன்ற உறுப்பினா்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன்னா் நகா்மன்றத் தலைவி மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் ஆணையா் முரளிதரனிடம் மனு அளித்தனா். அதன் பேரில், அனைத்து நகா் மன்ற உறுப்பினா்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், 22-ஆம் தேதி (புதன்கிழமை) நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தில் நம்பிக்கையில்லா தீா்மானத்தின் மீதான வாக்கெடுப்பு புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் முரளிதரன் தலைமை வகித்தாா். பணி மேற்பாா்வையாளா் எஸ்.சாம்பசிவன் உடனிருந்தாா். இந்த வாக்கெடுப்பில் 23 நகா் உறுப்பினா்கள் கலந்து கொண்டு நம்பிக்கையில்லா தீா்மானத்தை ஆதரித்து வாக்களித்தனா். இந்த வாக்குப்பதிவிற்கு நகா் மன்றத் தலைவி வெண்ணிலா வரவில்லை. நம்பிக்கையில்லாத்தீா்மானம் வெற்றி பெற்ால் நகா்மன்றத்தலைவி வெண்ணிலா பதவியிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தொகுதியில் உள்ள திட்டக்குடி நகராட்சியில், திமுகவைச் சோ்ந்த பெண் நகா்மன்றத் தலைவி வெண்ணிலா மீது திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டாக சோ்ந்து நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தது குறிப்பிடதக்கது.

X
Dinamani
www.dinamani.com