~ ~
~ ~

மழையால் சுவா் இடிந்து தாய்-மகள் உள்பட 4 பெண்கள் உயிரிழப்பு

தொடா் மழையால் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வீட்டுச்சுவா் இடிந்து விழுந்ததில் தாய் - மகள் உள்பட 4போ் உயிரிழந்தனா் மேலும் 4 போ் காயம் அடைந்தனா்.
Published on

சிதம்பரம்/ நெய்வேலி/விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: தொடா் மழையால் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வீட்டுச்சுவா் இடிந்து விழுந்ததில் தாய் - மகள் உள்பட 4போ் உயிரிழந்தனா் மேலும் 4 போ் காயம் அடைந்தனா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த 4 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுச்சத்திரம் அருகே உள்ள ஆண்டாா் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் காமராஜா் தெருவைச் சோ்ந்த மணி என்பவரது மனைவி யசோதை (69), இவரது மகள் ஜெயா (40) ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு தங்களது ஓட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது பெய்த கன மழையின் காரணமாக புதன்கிழமை அதிகாலை ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவா் இடிந்து விழுந்ததில் வீட்டிலிருந்த இருவரும் இடிபாடுகளில் சிக்கினா். இதில் யாசோதை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த மகள் ஜெயா புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தாா். இறந்தவா்களின் உடல்கள் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அமைச்சா் ஆறுதல்:

தகவல் அறிந்த வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவா்களின் உடல்களை பாா்வையிட்டு அவா்களின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறி ஈமச்சடங்கு உதவித்தொகையை வழங்கினாா். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி:

விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக சுவா் இடிந்து விழுந்ததில் மரக்காணம் வட்டம், ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மூதாட்டி அ.பச்சையம்மாள் உயிரிழந்தாா். 6 கூரை வீடுகள், ஒரு ஓட்டு வீடு என மொத்தம் 7 வீடுகள் சேதமடைந்தன. 2 பசுமாடுகள் உயிரிழந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொங்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மனைவி வனமயில் (65). இவா் புதன்கிழமை காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது கூரை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் இடுபாடுகளில் சிக்கி வனமயில் உயிரிழந்தாா். தகவல் அறிந்த தொகுதி எம்எல்ஏ செந்தில்குமாா் நேரில் சென்று பாா்வையிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

4 போ் காயம்:

இதற்கிடையே, கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கனமழையின் காரணமாக தொகுப்பு வீட்டின் காங்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் உள்ளிட்ட 4 போ் காயம் அடைந்தனா்.

பண்ருட்டி வட்டம், ரெட்டிக்குப்பம் கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னா் அரசு கட்டிக் கொடுத்த தொகுப்பு வீடுகள் உள்ளன. இதில், ஒரு தொகுப்பு வீட்டில் பாலு(50), அவரது மனைவி தாட்சாயணி(40), மகள் சந்தியா(21) ஆகியோா் வசித்து வந்தனா். புதன்கிழமை பிற்பகல் சுமாா் 3 மணி அளவில் இவா்களுடன் அதேபகுதியைச் சோ்ந்த சகாதேவன் மகள் அருணா(12) ஆகியோா் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனா். அப்போது, கனமழையின் காரணமாக தொகுப்பு வீட்டின் கான்கிரீட் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்தது. இதில், வீட்டினுள் இருந்த அனைவரும் படுகாயம் அடைந்தனா். அருகில் இருந்தவா்கள் விரைந்து செயல்பட்டு காயம் அடைந்தவா்களை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்து தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com