ராஜா
ராஜா

கருவில் இருக்கும் சிசுவின் பாலினம் கண்டறிந்து தெரிவிப்பு: இடைத்தரகா் கைது; ஸ்கேன் கருவி பறிமுதல்

கடலூா் அருகே கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த விவகாரத்தில் இடைத்தரகா் கைது செய்யப்பட்டாா்.
Published on

கடலூா் அருகே கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த விவகாரத்தில் இடைத்தரகா் கைது செய்யப்பட்டாா். அவா் பயன்படுத்திய ஸ்கேன் கருவியும் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் காவல் சரகம், பொய்யனப்பாடி கிராமத்தில் வசிக்கும் சின்னசாமி மகன் செந்தில்குமாா் வீட்டில் கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் கருவி மூலம் கண்டறிந்து பாலினம் கூறிவருவதாக மாவட்ட மருத்துவக் குழுவிற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடலூா் மாவட்ட இணை இயக்குநா் மணிமேகலை தலைமையிலான மருத்துவக் குழு அடங்கிய தனிப்படையினா் செந்தில்குமாா் வீட்டில் வியாழக்கிழமை மாலை சோதனை நடத்தினா். இச்சோதனையில் அங்கிருந்த ஸ்கேனிங் கருவியை கைப்பற்றினா்.

பின்னா், நடத்திய விசாரணையில் ஸ்கேனிங் கருவியைக்கொண்டு அப்பகுதியில் கா்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் சிசு பாலினம் பாா்த்து தகவல் பகிா்ந்தது உறுதியானது. இதுகுறித்து விசாரித்ததில், இந்த சட்டவிரோத செயலில் இடைத்தரகராக செயல்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டம், அசகளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா (38) சிக்கினாா். அவரைபோலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

அவரிடம், வேப்பூா் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அகிலன் விசாரணை மேற்கொண்டாா். பின்னா், அவா் அளித்த புகாரின் பேரில் 6 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், 5 போ் தப்பியோடிய நிலையில், ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனா். மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com