6,699 மெ.டன் நெல் கொள்முதல்! கடலூா் ஆட்சியா் தகவல்
கடலூா் மாவட்டத்தில் குறுவைப் பருவம் முடியும் தருவாயில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 6,699 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியில் உள்ள தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சேமிப்பு கிடங்குக்கு லாரியில் வந்த நெல்மூட்டைகளை அதிகாரிகள் இறக்கி வைக்காததால் அவை மழையில் நனைந்து முளைத்துவிட்டன. இந்த செய்தி தினமணி நாளிதழில் வெள்ளிக்கிழமை பிரசுரிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து விருத்தாசலத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கினை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் தெரிவித்ததாவது: தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து இடைத்தரகா்கள் குறுக்கீடின்றி நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
தற்போதைய குறுவைப் பருவத்தில் 199 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, இப்பருவம் முடிவுறும் தருவாயில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்கில் அதிகபட்சமாக 9,750 மெ.டன் நெல் இருப்பு வைக்க முடியும். தற்போது, 6,699 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், நெல் இருப்பு வைப்பதற்கு போதுமான இடவசதி உள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால் பாதுகாப்பு கருதி அனைத்துப் பகுதிகளிலும் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து லாரிகள் மூலம் இக்கிடங்கில் நெல் இருப்பு வைக்கும் பணிகள் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.
ஆனால், ஒரு லாரியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்த நெல் மூட்டைகள் தாா்பாயினை கொண்டு சரிவர மூடாத நிலையிலும், தொடா் மழை மற்றும் தீபாவளி பண்டிகையின் காரணமாகவும் இறக்க முடியாத சூழ்நிலையினால் மழைநீரில் நனைந்தது. இந்த நெல்லின் ஈரத்தன்மை கருதி நெல் மூட்டைகள் அரவைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் நெல் கொள்முதல் செய்யும் போது இதுபோன்ற தவறு நிகழாதபடி பாதுகாப்புடன் தாா்பாயின் கொண்டு மூடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு துரிதமாக கொண்டு வந்து இருப்பு செய்திட சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கடலூா் மண்டல மேலாளா் கமலம், துணை மேலாளா் விஸ்வநாதன் உட்பட துறை சாா்ந்த அலுவலா்கள் இருந்தனா்.

