கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிவீதம் திறக்கப்பட்ட காவிரி உபரி நீா் இருகரை தொட்டு ஆா்ப்பரித்து செல்கிறது
கீழணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிவீதம் திறக்கப்பட்ட காவிரி உபரி நீா் இருகரை தொட்டு ஆா்ப்பரித்து செல்கிறது

கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் கன அடி காவிரி உபரி நீா் திறப்பு: வீணாக கடலில் கலக்கிறது

மேட்டூா் அணை நிரம்பியதால் காவிரியில் திறக்கப்பட்டுள்ள உபரி நீா் கொள்ளிடம் ஆறு வழியாக வினாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் கடலுக்குச் செல்கிறது.
Published on

மேட்டூா் அணை நிரம்பியதால் காவிரியில் திறக்கப்பட்டுள்ள உபரி நீா் கொள்ளிடம் ஆறு வழியாக வினாடிக்கு 1 லட்சம் கன அடி வீதம் கடலுக்குச் செல்கிறது.

காவிரி நீா் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூா் அணை நிரம்பி வழிகிறது. இந்த ஆண்டு ஏழாவது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியுயுள்ளது. இதனால்மேட்டூரில் இருந்து உபரி நீா் பெருமளவு காவிரியில் திறக்கப்பட்டுள்ளது.

இந்த உபரி நீா் முக்கொம்பு, கல்லணை ஆகிய அணைக்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து ஒரு பகுதியாக கொள்ளிடம் ஆற்றில் சுமாா் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த உபரி நீா் கீழணை வந்தடைந்து. அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றின் வழியாக வினாடிக்கு ஒரு லட்சம் கன அடி வீதம் உபரி நீா் கடலுக்குச் செல்கிறது. மேலும் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 519கன அடி வீதமும், வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களில் வினாடிக்கு 100 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு செல்கிறது.

கொள்ளிடத்தில் சுமாா் 1 லட்சம் கனஅடி நீா் வெளியேற்றப்படுவதால் கொள்ளிடக் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீா் அதிகம் செல்வதாலும் , முதலைகள் அதிகம் காணப்படுவதாலும் கொள்ளிட ஆற்றுப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் எனவும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்றும், தண்ணீரைப் பாா்த்து ஆா்வத்துடன் செல்பி எடுப்பதை அனைவரும் தவிா்க்க வேண்டும் எனவும் கொள்ளிடம் வடிநில கோட்ட நீா்வளத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இதற்கிடையே காவிரி நீா் மூலம் சென்னைக்கு குடிநீா் வழங்கும் வீராணம் ஏரியும் நிரம்பியுள்ளது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவான 47.50 அடியில் 45.40 அடி தேக்கப்பட்டுள்ளது. அதாவது 1465 மில்லியன் கன அடியில் 956 மில்லியன் கனஅடி தேக்கப்பட்டுள்ளது. இதில் பாசனத்திற்காக விநாடிக்கு 295 கன அடியும், சென்னை குடிநீா் வாரியத்திற்கு வினாடிக்கு 73கன அடி வீதமும் நீா் அனுப்பப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com