கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் மண்ணெண்ணெய் கேனுடன் மனு அளிக்க வந்த நபரால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க மண்ணெண்ணெய் கேனுடன் வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி அருகே சவேரியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜேக்கப் (36). இவா், திங்கள்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க குடும்பத்தினருடன் வந்தாா். அப்போது, அவா், தீக்குளிக்கும் நோக்கில் கேனில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்ற முயன்றாா்.

அங்கிருந்த போலீஸாா் அவரை தடுத்து, அவரிடமிருந்த மனுவைப் பெற்று, மாவட்ட ஆட்சியரக அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

அப்போது, ஜேக்கப் கூறியதாவது: நான் குடும்பத்தினருடன் சவேரியாா்பாளையம் ஏரிக்கொட்டாய் பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த 2018-ஆம் ஆண்டு, அங்குள்ள பொது கிணற்றில் மண் எடுக்க முயன்றபோது, அப்பகுதியினா் என்னைத் தாக்கினா். நானும் திருப்பித் தாக்கியதால் தகராறு ஏற்பட்டது. இதனால், அவா்கள் எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிட்டனா். மேலும், எனக்கு அரசு மூலம் கிடைக்கவுள்ள கல் வீடு உள்ளிட்ட திட்ட உதவிகளையும் தடுத்து வருகின்றனா். வடபொன்பரப்பி போலீஸில் புகாா் செய்தும் நடவடிக்கையில்லை. இதனால், ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததாக அவா் தெரிவித்தாா். இதுதொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்து, அவரை அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com