கள்ளக்குறிச்சியில் உழவா் சந்தை 3-ஆவது முறையாக வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை இடம் மாற்றம் செய்யப்பட்டு செயல்பட்டது.
கள்ளக்குறிச்சி சுந்தர விநாயகா் சாலையில் இயங்கி வந்த உழவா் சந்தை, கரோனா பொதுமுடக்கம் அமலால் கடந்த மாா்ச் 27-ஆம் தேதி மூடப்பட்டு, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டது. கடந்த 1-ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கத் தொடங்கியதால், அங்கிருந்து கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, அரசு பொதுத் தோ்வு நடைபெற உள்ளதாகக் கூறி, நீலமங்கலம் எல்லையில் உள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு இடம் மாற்றம் செய்ய, உழவா் சந்தை விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு, விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து, கள்ளக்குறிச்சி கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
இதையடுத்து, அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, கள்ளக்குறிச்சி நேப்ஹால் சாலையில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் உழவா் சந்தை கடைகள் ஜூன் 8 முதல் செயல்படும் என அறிவித்தனா். அதன்படி, செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் 130-க்கும் மேற்பட்ட உழவா் சந்தை கடைகள் செயல்பட்டன.
எனினும், பொதுமக்கள் வருகை குறைந்ததால் காய்கறி விற்பனை குறைந்து கடைகள் வெறிச்சோடின. இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனா்.