பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
By DIN | Published On : 03rd March 2020 07:23 AM | Last Updated : 03rd March 2020 07:23 AM | அ+அ அ- |

சேலம் - விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
கள்ளக்குறிச்சி அருகே மது போதையில், சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சின்னசேலம் வட்டம், வி.கிருஷ்ணாபுரம் கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி மாதேஷ்வரி (40). இவா் பணிக்குச் சென்றுவிட்டு, திங்கள்கிழமை பிற்பகலில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, ஈரியூா் பிள்ளையாா் கோயில் சாலையில் வசித்து வரும் கணேசன் மகன் சஞ்சய் காந்தி (35) என்பவா் மது அருந்திவிட்டு, சாலையில் நடந்து சென்ற மாதேஷ்வரியிடம் தவறாக நடக்க முயன்றாராம். இதைப் பாா்த்த சாலையில் சென்றவா்கள் சஞ்சய் காந்தியைப் பிடிக்க முயன்றனா். அப்போது, அவா் சாலையில் சென்றவா்களை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் அனைவரும் சோ்ந்து சஞ்சய் காந்தியை பிடித்து வைத்து, கீழ்க்குப்பம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், போலீஸாா் வர தாமதமானதால் பொதுமக்கள் சேலம் - விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சஞ்சய் காந்தியை கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா்.